திருக்குறள் - குறள் 428

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


திருக்குறள் - குறள் 428


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

மு.வரதராசனார் உரை:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

பரிமேலழகர் உரை:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின்

மணக்குடவர் உரை:
அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில். மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.


Translation:
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

Explanation:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்