திருக்குறள் - குறள் 409

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கல்லாமை.


திருக்குறள் - குறள் 409


மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

மு.வரதராசனார் உரை:
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

பரிமேலழகர் உரை:
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.


Translation:
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.

Explanation:
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்