திருக்குறள் - குறள் 410
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- அரசியல்
- அதிகாரம்:
- கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
திருக்குறள் - குறள் 410 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
மு.வரதராசனார் உரை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
சாலமன் பாப்பையா உரை
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
பரிமேலழகர் உரை
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
(இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.
Translation
Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.
Explanation
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 41: கல்லாமை
குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
குறள் 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
குறள் 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.
குறள் 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.
குறள் 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.
குறள் 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.