திருக்குறள் - குறள் 382
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி.
திருக்குறள் - குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
மு.வரதராசனார் உரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈக
மணக்குடவர் உரை:
அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வேந்தர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும்.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
Explanation:
Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்