திருக்குறள் - குறள் 381
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி.
திருக்குறள் - குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
மு.வரதராசனார் உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
சாலமன் பாப்பையா உரை:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
பரிமேலழகர் உரை:
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான்.
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது எ
மணக்குடவர் உரை:
படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
படையும், குடிமக்களும், பொருளும், அமைச்சும், நட்பும், அரணும்ஆகிய ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.
Translation:
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
Explanation:
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்