திருக்குறள் - குறள் 370

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.


திருக்குறள் - குறள் 370


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

மு.வரதராசனார் உரை:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

பரிமேலழகர் உரை:
ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாத


மணக்குடவர் உரை:
நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருபோதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிட்டால், நீக்கிய அச்செயல் அவனுக்கு அப்போதே எக்காலத்திலும் ஒரு நிலையில் நிலைத்திருக்கும் தன்மையைத் தரும்.

Translation:
Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.

Explanation:
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்