திருக்குறள் - குறள் 361
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.
திருக்குறள் - குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
மு.வரதராசனார் உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவுநின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின் , வேதனை பற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே? அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம் ஆகலின
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும
மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாமல் வருகின்ற பிறப்பினை உண்டாக்கும் வித்து அவா (ஆசை) என்று நூலோர் சொல்லுவர்.
Translation:
The wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring.
Explanation:
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்