திருக்குறள் - குறள் 36

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.


திருக்குறள் - குறள் 36


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

மு.வரதராசனார் உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

பரிமேலழகர் உரை:
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று'


மணக்குடவர் உரை:
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கடைசிக்கு காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும்.

Translation:
Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Explanation:
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்