திருக்குறள் - குறள் 339

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.


திருக்குறள் - குறள் 339


உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

மு.வரதராசனார் உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

பரிமேலழகர் உரை:
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போல


மணக்குடவர் உரை:
உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்குச் சாக்காடு வருவது, உறக்கம் வருவதற்கு ஒப்பாகும். அதன்பின் பிறப்பு வருதல், உறங்கியபின் விழித்தல் வருதலோடு ஒப்பாகும்.

Translation:
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.

Explanation:
Death is like sleep; birth is like awaking from it.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்