திருக்குறள் - குறள் 33

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.


திருக்குறள் - குறள் 33


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

மு.வரதராசனார் உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

பரிமேலழகர் உரை:
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இ


மணக்குடவர் உரை:
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும்.

Translation:
To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Explanation:
As much as possible, in every way, incessantly practice virtue.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்