திருக்குறள் - குறள் 323

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை.


திருக்குறள் - குறள் 323


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

மு.வரதராசனார் உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

பரிமேலழகர் உரை:
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையா


மணக்குடவர் உரை:
இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன்னோடு இணைப்பின்றித் தானேயாக ஒரே ஓர் அறமாக இருக்க நல்லது கொல்லாமையேயாகும். அதன் பின்னே நிற்க, பொய்யாமை என்கின்ற ஆறாம் நல்லதாகும்.

Translation:
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.

Explanation:
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்