திருக்குறள் - குறள் 319
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.

திருக்குறள் - குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
மு.வரதராசனார் உரை:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
பரிமேலழகர் உரை:
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்
மணக்குடவர் உரை:
பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறர்க்குத் துன்பத்தினை முற்பகல் செய்வானேயானால், தமக்குத் துன்பங்கள் பிற்பகலில் அவர் செய்யாமல் தாமே வரும்.
Translation:
If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.
Explanation:
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்