திருக்குறள் - குறள் 311

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.


திருக்குறள் - குறள் 311


சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

மு.வரதராசனார் உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.) சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்பு


மணக்குடவர் உரை:
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் தரும் செல்வங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணிவாகும்.

Translation:
Though ill to neighbor wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.

Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்