திருக்குறள் - குறள் 299
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை.

திருக்குறள் - குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
மு.வரதராசனார் உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
பரிமேலழகர் உரை:
எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்ப
மணக்குடவர் உரை:
சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாவாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்யாமையாகிற விளக்காகும்.
Translation:
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.
Explanation:
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்