திருக்குறள் - குறள் 296

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை.


திருக்குறள் - குறள் 296


பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

மு.வரதராசனார் உரை:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

பரிமேலழகர் உரை:
பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானு


மணக்குடவர் உரை:
பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொய்யாமையினைப் போன்று புகழுக்கு காரணமான வேறு எதுவும் இல்லை. வருத்தமின்றி எல்லா அறங்களையும் அதுவே கொடுப்பதாகும்.

Translation:
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

Explanation:
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்