திருக்குறள் - குறள் 280

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம்.


திருக்குறள் - குறள் 280


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

மு.வரதராசனார் உரை:
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

பரிமேலழகர் உரை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் எ


மணக்குடவர் உரை:
தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் 'தவம் செய்வதற்கு என்று' தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போதுமானதாகும்.

Translation:
What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?.

Explanation:
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்