திருக்குறள் - குறள் 273

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம்.


திருக்குறள் - குறள் 273


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

மு.வரதராசனார் உரை:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

பரிமேலழகர் உரை:
வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போல


மணக்குடவர் உரை:
வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மனவலிமை இல்லாதவர்கள் வலிமையுடையார் போலத் தவ வேடங் கொண்டு ஒழுக்கக் கேட்டினைச் செய்தல் எப்படிப்பட்டதென்றால், பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு அயலான் பயிரை மேய்ந்தது போன்றதாகும்.

Translation:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.

Explanation:
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்