திருக்குறள் - குறள் 247
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.

திருக்குறள் - குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
மு.வரதராசனார் உரை:
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
பரிமேலழகர் உரை:
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன
மணக்குடவர் உரை:
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாதலைப் போல உயிர்கள் மீது அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும்.
Translation:
As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.
Explanation:
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்