திருக்குறள் - குறள் 242
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.
திருக்குறள் - குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.
பரிமேலழகர் உரை:
நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே
மணக்குடவர் உரை:
நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பல நெறிகளிலும் நின்று ஆராய்ந்து, அருளினைத் துணையாகக் கொள்ளுவார்களாக; துணையான அறம் அருளேயாகும். பல வகைப்பட்ட நெறிகளில் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே அன்றிப் பிறிது இல்லை.
Translation:
The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.
Explanation:
(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்