திருக்குறள் - குறள் 24
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- பாயிரவியல்
- அதிகாரம்:
- நீத்தார் பெருமை
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
திருக்குறள் - குறள் 24 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
மு.வரதராசனார் உரை
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
பரிமேலழகர் உரை
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து
மணக்குடவர் உரை
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
அறிவு என்னும் அங்குசத்தினால் பொறிகளாகிய ஐந்து யானைகளையும் ஆசைகளில் சொல்லாமல் காப்பவன் எல்லாவற்றிலும் மேலான வீடு என்னும் பேரின்ப நிலத்திற்கு ஒரு வித்து ஆவான்.
Translation
He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.
Explanation
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 3: நீத்தார் பெருமை
குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
குறள் 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.