திருக்குறள் - குறள் 209

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம்.


திருக்குறள் - குறள் 209


தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

மு.வரதராசனார் உரை:
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

பரிமேலழகர் உரை:
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார


மணக்குடவர் உரை:
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச் செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக.

Translation:
Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!.

Explanation:
If a man love himself, let him not commit any sin however small.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்