திருக்குறள் - குறள் 1330
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை.
திருக்குறள் - குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
மு.வரதராசனார் உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
மணக்குடவர் உரை:
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காம நுகர்ச்சிக்குத் தமக்குள் ஊடல் செய்வது இன்பமாகும்; அந்த ஊடலுக்கு இன்பமானது காதலர் சேர்ந்து தழுவிக் கொள்ளுதலாகும்.
Translation:
A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.
Explanation:
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்