திருக்குறள் - குறள் 1329

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை.


திருக்குறள் - குறள் 1329


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

மு.வரதராசனார் உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை:
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக'


மணக்குடவர் உரை:
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.

Translation:
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.

Explanation:
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்