திருக்குறள் - குறள் 1237
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல்.
திருக்குறள் - குறள் 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.
மு.வரதராசனார் உரை:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.
பரிமேலழகர் உரை:
(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லை
மணக்குடவர் உரை:
நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நெஞ்சே! இவர் கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலரிடம் சென்று என் மெலிந்த தோள்கள் செய்யும் ஆரவாரத்தினைக் கூறி ஒரு மேம்பாடு அடையமாட்டாயோ?. அப்படிச் செய்தால் சிறந்ததாகும்.
Translation:
My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?.
Explanation:
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்