திருக்குறள் - குறள் 1200
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி.
திருக்குறள் - குறள் 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.
மு.வரதராசனார் உரை:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை ய
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உன்னுடன் பொருந்தாத தலைவர்க்கு உனது மிகுந்த நோயினைச் சொல்ல முயல்கின்ற நெஞ்சமே! அது முடியாத செயலாகும். முடியாத அச்செயலை விட்டு, உனக்குத் துன்பம் செய்கின்ற கடலினைத் தூர்க்க முயற்சிப்பாயாக; அது எளிமையானதாகும்.
Translation:
Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!.
Explanation:
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்