திருக்குறள் - குறள் 120

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.


திருக்குறள் - குறள் 120


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

மு.வரதராசனார் உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

பரிமேலழகர் உரை:
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு ம


மணக்குடவர் உரை:
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறர் பொருளையும், தம்முடைய பொருளைக் காப்பது போலக் காத்து வாணிபம் செய்தால், அதுவே வாணிபம் செய்பவர்களுக்கு நல்ல வாணிபம் ஆகும்.

Translation:
As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.

Explanation:
The true merchandise of merchants is to guard and do by the things of others as they do by their own.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்