திருக்குறள் - குறள் 117

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.


திருக்குறள் - குறள் 117


கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

மு.வரதராசனார் உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை:
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

பரிமேலழகர் உரை:
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே


மணக்குடவர் உரை:
நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நடுவு நிலைமையில் நின்று அறத்திலிருந்து வழுவாமல் நின்றவனுடைய வறுமையினைப் பெரியோர்கள் வெறுமையாக வைத்து நினைக்க மாட்டார்கள்.

Translation:
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.

Explanation:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்