திருக்குறள் - குறள் 1169

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல்.


திருக்குறள் - குறள் 1169


கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

மு.வரதராசனார் உரை:
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

சாலமன் பாப்பையா உரை:
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னா


மணக்குடவர் உரை:
கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தலைவன் பிரிந்திருக்கும் இந்நாட்களில் இரவுப் பொழுதுகள் நெடியவாய்க் கழிகின்றன; தலைவன் செய்கின்ற கொடுமைகளைவிடக் கொடுமை செய்கின்றன.

Translation:
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.

Explanation:
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்