திருக்குறள் - குறள் 1161
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல்.
திருக்குறள் - குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.
மு.வரதராசனார் உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
பரிமேலழகர் உரை:
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்
மணக்குடவர் உரை:
இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இந்நோயினைப் பிறர் அறியாமல் இருக்கும்பொருட்டு நான் மறைக்க முயல்கிறேன். ஆனால் இந்த நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுந்து வருவதுபோல மிகுந்து வருகின்றது.
Translation:
I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells.
Explanation:
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்