திருக்குறள் - குறள் 1127

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்.


திருக்குறள் - குறள் 1127


கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

மு.வரதராசனார் உரை:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என


மணக்குடவர் உரை:
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் எப்போதும் எம் கண்ணில் உள்ளார். ஆதலால், எழுதுகின்ற அத்துணைக் காலமும் அவர் மறைவதனை அறிந்து, கண்ணினை மையினால் எழுதுவதும் செய்யமாட்டோம்.

Translation:
My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

Explanation:
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்