திருக்குறள் - குறள் 1109

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்.


திருக்குறள் - குறள் 1109


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

மு.வரதராசனார் உரை:
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.

பரிமேலழகர் உரை:
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே;


மணக்குடவர் உரை:
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புணர்ச்சி இனிமையாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீக்குதலும், பிறகு புணர்தலும் ஆகிய இவைதாம் திருமணம் செய்துகொண்டு காமத்தை இடைவிடாமல் எய்தியவர்கள் பெற்ற பயன்களாகும்.

Translation:
The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.

Explanation:
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்