திருக்குறள் - குறள் 1104

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்.


திருக்குறள் - குறள் 1104


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.

மு.வரதராசனார் உரை:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

பரிமேலழகர் உரை:
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறு


மணக்குடவர் உரை:
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன்னைவிட்டு நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தன்மைத்தான தீயினை இப்பெண் எவ்வுலகில் பெற்றாள்?.

Translation:
Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?.

Explanation:
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்