திருக்குறள் - குறள் 1103
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்.
திருக்குறள் - குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.
மு.வரதராசனார் உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.
பரிமேலழகர் உரை:
(நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தல
மணக்குடவர் உரை:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாம் விரும்பிய மகளிரது மெல்லிய தோள்களின் மீது துயிலும் துயில்போலத் தாமரைக் கண்ணான் உலகம் இனிமையுடையதோ?.
Translation:
Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?.
Explanation:
Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்