திருக்குறள் - குறள் 1097

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல்.


திருக்குறள் - குறள் 1097


செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

மு.வரதராசனார் உரை:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன


மணக்குடவர் உரை:
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பின்னர் இனிதாகவும் முன்னர் இனிமை இல்லாததுமான சொல்லும், மனத்தில் கோபியாதிருந்து புறத்தே கோபித்தார் போன்ற வெகுளி நோக்கும் அயலார் போன்றிருந்து நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவனவாகும்.

Translation:
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.

Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்