திருக்குறள் - குறள் 1096
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல்.
திருக்குறள் - குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
மு.வரதராசனார் உரை:
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
பரிமேலழகர் உரை:
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கட
மணக்குடவர் உரை:
கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வெளிப் பார்வைக்கு அயலார் போலக் கடுஞ்சொல் சொன்னாலும் மனத்தில் பகைமையில்லாதவருடைய சொல் விரைவில் அறிந்து கொள்ளப்படும்.
Translation:
Though with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known.
Explanation:
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்