திருக்குறள் - குறள் 1043
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு.

திருக்குறள் - குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
மு.வரதராசனார் உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.
பரிமேலழகர் உரை:
நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக
மணக்குடவர் உரை:
தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.
Translation:
Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.
Explanation:
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்