மாடித்தோட்டத்தில் சுரைக்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் சுரைக்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் சுரைக்காய் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் சுரைக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
 

 • Grow Bags அல்லது Thotti.
 • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
 • விதைகள்
 • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
 • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தொட்டியில் இடும்பொழுது மணல் மற்றும் இயற்கை உரங்களை சரி பாதியாக இட வேண்டும்.

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கலவை நன்கு மக்கியதும் விதைப்பு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

விதைகளை நன்கு முற்றிய காய்களில் இருந்து சேகரிக்க வேண்டும் அல்லது கடைகளில் இருந்தும் வாங்கி உபயோகப்படுத்தலாம். நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு பையில் 2 விதைகள் வரை விதைக்கலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.

பொதுவாக தென்னை நார்க்கழிவுகள் இடும்பொழுது அவை ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

பந்தல் முறை

இதற்கு பந்தல் அமைப்பதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளின் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இதன் காய்கள் பெரியதாக இருப்பதால் அமைக்கும் பந்தல் உறுதியுடன் இருக்க வேண்டும். இதன் கிளைகளை சுவற்றின் மீதும் படர விடலாம்.

உரங்கள் :

வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.

செடிகளைக் காக்கும் இயற்கை பபூச்சிக் கொல்லியாக வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்த தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செய்லப்படும்.

பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு எதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் .

அறுவடை :

இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்களை முற்றி விடாமல் இளம் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

சுரைக்காய் பயன்கள்:

 • சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம்.
 • சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
 • சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
 • பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
 • குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
 • சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.