அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
John · புதிய ஏற்பாடு
யோவான்
21 அதிகாரங்கள் · 879 வசனங்கள் · page 31 / 36
-
18 யோவான் – அதிகாரம் 18
18:10 18:11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
18:12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
18:13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
18:14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
18:15 சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
18:16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
18:17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.
18:18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
18:19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
18:20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
18:21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
18:22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
18:23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
18:24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
18:25 சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
18:26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
18:27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
18:28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
18:29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
18:30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
18:31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள் ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
18:32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
18:33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
18:34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.