மாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை

Nov 9, 2022 - 00:00
 0  31
மாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • நாற்றுகளை உருவாக்க குழித்தட்டுகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

10 கிலோ கொள்ளளவு கொண்ட தொட்டி அல்லது பைகளில் 8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.

நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

பாதுகாப்பு முறைகள்

பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அறுவடை

120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.

முட்டைகோஸ் பயன்கள்:
  • இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
  • சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
  • எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
  • தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow