மாடித்தோட்டத்தில் தண்டுக்கீரை பயிரிடும் முறை
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தண்டுக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். இக்கீரைகள் சற்று உயரமாகவும், இலைகள் பெரியதாகவும் இருப்பதால் தொட்டியை சற்று அகலமானதாக தேர்வு செய்ய வேண்டும்.
அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.
விதைத்தல்
விதைகளை மணல் கொண்டு கலந்து பைகளில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதைத்தால் சீராக விழும். பின்னர் அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். விதைகளின் மீது செய்திதாள்களை கொண்டு மூடி விட வேண்டும். விதைகள் முளைத்தவுடன் செய்திதாள்களை நீக்கி விடலாம்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருந்தால் ஈரப்பதத்தை கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
உரங்கள்
சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
இக்கீரைகள் அதிகளவில் நெருக்கமாக இருந்தால் களைத்து விட வேண்டும். இல்லையெனில் மற்றொரு தொட்டியில் மாற்றி நடவு செய்ய வேண்டும்.
அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
கீரைகளை முற்றி விடாமல் இளம் தளிராக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக 30 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம். இதில் கீரைகளை முற்ற விட்டு இதிலிருந்து அடுத்த சாகுபடிக்கு தேவையான விதைகளையும் சேகரித்துக் கொள்ளலாம்.
பயன்கள்:
- இந்தக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, நார்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.
- குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.,
- பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது.
- இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. இதனை மூல நோய் உள்ளவர்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
What's Your Reaction?