கொத்துப்பேரி (plum) சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Apr 1, 2022 - 00:00
 0  24
கொத்துப்பேரி (plum) சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்று கொத்துப்பேரி (பிளம்ஸ்).

சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும்.

தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிளம்ஸ் அதிகமாக விளைகின்றது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

குறுகிய கால இரகம் : ரூபியோ

இடைக்கால இரகம் : ஹேல், கேவியோட்டா மற்றும் அபன்டன்ஸ்

நீண்டகால இரகம் : கெல்சி, ஸார் மற்றும் ஷாட்சுமா ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவையாகும்.

பருவம்

குறுகிய மற்றும் இடைக்கால இரகங்களுக்கு ஜீன் – ஜீலை மாதமும், நீண்டகால இரகங்களுக்கு ஜீலை – ஆகஸ்ட் மாதமும் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய கரிசல் மண், செம்மண் கலந்த களிமண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். 60 செ.மீ நீளம், அகலம், ஆழமுள்ள குழிகளை தயார் செய்து அதில் தொழு உரம் அல்லது கலப்பு உரங்களை இட்டு குழிகளை ஆற போட வேண்டும்.

விதைத்தல்

ஒவ்வொரு குழிக்கும் 4 மீட்டர் இடைவெளி இருக்குமாறு குழிகளின் மத்தியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

காய்க்கும் மரங்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மரம் ஒன்றுக்கு மக்கிய தொழு உரம் 30 கிலோ, 500 கிராம் தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும். இதையே பிரித்து இரண்டு முறை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். நுனியில் வளர்ந்துள்ள பகுதியை வெட்டிவிட்டு பக்கவாட்டில் வளரும் கிளைகளை வளரச் செய்யவேண்டும். மொட்டு ஒட்டுக்கட்டிய பகுதிக்கு கீழிலிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போது வெட்டி நீக்கவேண்டும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கவாத்து செய்தால் நல்ல பலன் கொடுக்கும். காய்ந்த குச்சிகளையும், குறுக்காக உள்நோக்கி வளரும் குச்சிகளையும், மிக மெலிந்த குச்சிகளையும் வெட்டி எறிய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த அதிகாலை வேளையில் மாலத்தியான் 50 இசி 2 மில்லி மருந்து, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். ப்ளம்ஸ் மரங்களை நோய்கள் தாக்குவது இல்லை.

அறுவடை

நன்கு பழுத்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். மரங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்க கூடியது.

மகசூல்

மரம் ஒன்றிலிருந்து, வருடத்திற்கு 25 முதல் 30 கிலோ பழங்களை அறுவடை செய்யலாம்.

பயன்கள்
  • இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லவை.
  • இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த பழங்கள் விளங்குகின்றன.
  • இவை இரத்தத்தை விருத்தி செய்யவும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
  • மன அழுத்தத்தைப் நீக்கி டென்ஷனைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
  • தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்கின்றன. நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
  • சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவற்றுக்கு தீா்வாக பிளம்ஸ் பழம் விளங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow