கால்நடை பராமரிப்பு – புறா வளர்ப்பு முறை

 0  30
கால்நடை பராமரிப்பு – புறா வளர்ப்பு முறை

இரகங்கள்

மயில்புறா, சிராஸ், கோழிப்பிடங்கு, கிங், காக்டோ, மெக்கோ, சன்காணு கிளி புறா வகைகள் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம்.

வீட்டு மேலாண்மை

அறை தயார் செய்தல்

புறாக்கள் தங்குவதற்கு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில் அறையை கட்டவேண்டும். அதற்கு செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும்.

அதன் பின் சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் பகுதி அறையின் உள் பக்கமாக இருக்குமாறு அமைக்க வேண்டும். வாசலுக்கான இடைவெளி தவிர வேறு இடைவெளிகள் இருக்ககூடாது. வசதிக்கேற்ப கூரையை அமைக்க ஓலை அல்லது கான்கிரிட் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீவன மேலாண்மை

புறாக்களுக்கு பெரிதாக தீவனம் எதும் போடத் தேவையில்லை. அவையே வெளியே சென்று இரை தேடிக்கொள்ளும்.

ஆனால் மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் உணவாக கொடுக்க வேண்டும்.

இனப்பெருக்க மேலாண்மை

முட்டையிடும் பருவம்

சுவரில் பதிக்கப்பட்ட மண் பானையில் ஜோடி ஜோடியாக புறாக்கள் அடைந்துக்கொள்ளும். பெண் புறா இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். முட்டையை கையால் தொடக்கூடாது. தொட்டால் முட்டைகள் பொறிக்காது. பெண் புறா அடை படுத்தவுடன் ஆண் புறா வேறு பானைக்கு மாறிவிடும். முட்டைகளை ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். மற்ற பறவைகளை கூட்டை நெருங்கவும் விடாது. அடை உட்கார்ந்த 18 முதல் 20 நாட்களில் முட்டைகள் பொரித்து, குஞ்சுகள் வெளிவரும். பெற்றோர் புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்காக உணவு கொண்டு வந்து ஊட்டும். அப்படி ஊட்டும் போது, தன் உடலில் சுரக்கும் ஜீரணமாக்கும் என்ஸைமை உணவோடு கலந்து கலவையாக ஊட்டும். இதை புறாப் பால் என்பார்கள். பின் 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.

சுகாதார மேலாண்மை

குஞ்சுகள் பராமரிப்பு

குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கும். குஞ்சுகள் பெற்றோர் சிறகின் கதகதப்பில் உறங்கும். குஞ்சு பொறித்த 15 ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால் கூடுதல் எடை கிடைக்கும். பிறந்த ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆனவுடன், புறாக் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறக்க ஆரம்பிக்கும்.

பாதுகாப்பு முறைகள்

இதில் நோய் தாக்குதல் எதுவும் காணப்படுவது இல்லை.

விற்பனை

புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத் தான் அதிக கிராக்கி உள்ளது. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 200 ரூபாய் வரை விற்பனையாகும். பெரிய புறா ஜோடி 300 ரூபாய்க்கு விற்பனையாகும். தற்பொழுது இதுவும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow