கத்தரிக்காய் (Brinjal or Egg plant)

Dec 16, 2022 - 00:00
 0  40
கத்தரிக்காய் (Brinjal or Egg plant)

கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்விகமாக கொண்டது. கருநீலம், இளம்பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீல் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகை கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என் முற்றாத அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய பயன்படுகின்றன.

பருவம்

மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் சாகுபடிக்கு சிறந்தவை.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய செம்மண், வண்டல் மண் வகைகள் உகந்தது.

விதையளவு

ஒரு எக்டருக்கு 400 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதைநேர்த்திச் செய்ய வேண்டும். மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் விதைநேர்த்தி செய்யலாம். 400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லத்தை சிறிது அரிசிக் கஞ்சியுடன் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால்

நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுக்கு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நடவு வயலை நன்கு உளி கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள நிலத்தில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்றுகளின் வயது 25 முதல் 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். நீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும். மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உரங்கள்

தொழு உரமாக எக்டருக்கு 25 டன் மற்றும் இதனுடன் வேப்பம் பிண்ணாக்கு 200 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல்ச்சத்து 30 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.

நடவிற்குப்பின் மேற்சொன்ன உரங்களில் பாதியளவு உரங்களை மேலுரமாக இட வேண்டும். உரங்களை கத்தரிச் செடியிலிருந்து 10 செ.மீ தள்ளி மண்ணில் இட்டு கலந்து செடிகளுக்கு மண் அணைத்து விடவேண்டும். செடிகளுக்கு உரமிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

செடிகளுக்கு ட்ரைக்கோடானால் 2 பிபிஎம் மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35 மில்லி கிராம் இவற்றை ஒரு லிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

களை நிர்வாகம்

நாற்றுகளை நடுவதற்கு முன் களைக்கொல்லி இடுதல் அவசியம். களைகள் முளைக்கும் முன் அவற்றைக் கட்டுப்படுத்த புளுகுளோரலின் என்னும் களைக் கொல்லியினை 1 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து ஒரே சீராகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு களைக்கொல்லி தெளித்தவுடன் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும். பின்பு மேலுரமிடுவதற்கு முன்பு கொத்துக்களை கொண்டு களைகளை நீக்கவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

காய்த்துளைப்பான்

தண்டு மற்றும் காய்த்துளைப்பானை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்டோசல்ஃபான் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் மூக்கு வண்டு

சாம்பல் மூக்கு வண்டுகளை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.

​​​​​​நூற்புழு

நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போஃபியூரான் இட வேண்டும்.

சிலந்திப்பூச்சி

சிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியை சேர்த்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசண கொல்லியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.

வாடல் நோய்

வாடல் நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மிலி (அ) டைமெத்தோயோட் 2.5 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்களை பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்யவேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன்கள் வரை கிடைக்கும். வீரிய ஒட்டு இரகங்களில் 45-50 டன்கள் வரை கிடைக்கும்.

Brinjal-Egg Plant
Brinjal-Egg Plant cultivation
பயன்கள்:
  • கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
  • வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
  • அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow