மாடித்தோட்டத்தில் முளைக்கீரை பயிரிடும் முறை

Apr 6, 2023 - 00:00
 0  36
மாடித்தோட்டத்தில் முளைக்கீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முளைக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

பைகளில் உரங்களை நிரப்பும் பொழுது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.

விதைத்தல்

விதைகளை மணல் கொண்டு கலந்து பைகளில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதைத்தால் சீராக விழும். பின்னர் அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். விதைகளின் மீது செய்திதாள்களை கொண்டு மூடி விட வேண்டும். விதைகள் முளைத்தவுடன் நீக்கி விடலாம்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

25 நாட்களில் கீரைகளை அறுவடை செய்யலாம். கீரைகள் முற்றிவிடாமல் இளந்தளிராக அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
  • முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரிப்புச் செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றது.
  • இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்தாக உள்ளது.
  • முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன.
  • இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
  • இது மலமிளக்கியாகவும் செயற்படுகின்றது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow