மரவள்ளி கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மரவள்ளி கிழங்கு குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு எனக் கூறுவார்கள்.
தென் அமெரிக்காவையும், மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மரவள்ளி கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். மானாவாரியில் செப்டம்பர் – அக்டோபர் மாதம் நடவு செய்ய வேண்டும்.
மண்
செம்மண், கரிசல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும். களிமண், வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0க்குள் இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கச் செய்யவேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 1900-2500 கிலோ கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவின்போது முதல் பாசனமும், மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். அதன் பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும்.
உரங்கள்
ஒரு எக்டருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 80:225:160 கிலோ தேவைப்படும். இவற்றில் அடியுரமாக ஏக்கருக்கு 40 கிலோ யூரியா, 225 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நடவு செய்து 20வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்பொழுது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்து விடவேண்டும். பிறகு 3ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.
நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைப்புகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
வெள்ளை ஈ
வெள்ளை ஈ மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம். இதனால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.
மகசூல்
240 நாட்களில் எக்டருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.
பயன்கள்
- இத்தாவர கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பருத்தி மற்றும் சணல் ஆடைகள் தயாரிப்பிலும், காகிதம் மற்றும் கடினமான அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றது.
- இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
- இதிலுள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள், பெருங்குடல் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை குறைப்பதுடன் நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
- இக்கிழங்குகள் உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
- வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
What's Your Reaction?






