சேனைக்கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Jan 22, 2023 - 00:00
 0  27
சேனைக்கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சேனைக்கிழங்கு இதனை பெரிய கரணை என்றும் கூறுவார்கள்.

ஏனெனில் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும்.

சேனைக்கிழங்குச் செடி ஒன்றரை மீட்டர் உயரம் வளரும், ஒன்பது மாதப் பயிராகும்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

இதில் இரண்டு வகைகள் உண்டு.

மிருதுவான கிழங்கு :

இது மிகுந்த காரம் உடையது. சாப்பிடும் போது வாய், தொண்டை முதலியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும். ஆனால் அதிக மகசூல் கொடுக்கவல்லது.

கெட்டியான கிழங்கு :

இவ்வகை கிழங்குகள் கெட்டியானவை. இதில் காரத்தன்மை கிடையாது. சதையின் நிறம் வெள்ளையாக அல்லது இளம் சிவப்பாக இருக்கும்.

பருவம்

மாசி – பங்குனி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஆகும்.

மண்

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இரு மண்பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 வரை இருத்தல் நல்லது.

நிலம் தயாரித்தல்

சேனைக்கிழங்கு நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பின்பு 75 செ.மீ இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுக்க வேண்டும். அதன்பின் குழிகளில் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

விதையளவு

சேனைக்கிழங்கு பொதுவாக கிழங்குகள் மூலமாகவே இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1,400 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.

விதைத்தல்

நடவுக்கு பெரிய கிழங்குகளை சிறுசிறு துண்டுகளாகவோ அல்லது முளைவுடன் கூடிய கிழங்குகளாகவோ பயன்படுத்தலாம். தேர்வு செய்த கிழங்குகளை பூஞ்சாண மருந்துக் கலவையில் கலக்கி எடுத்து, குழியின் நடுவில் 20 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் தண்ணீர் விட வேண்டும். பின்பு மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு ஒருவார இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும். காய்ந்த இலைகளை பயன்படுத்தி நிலப்போர்வை அமைப்பதால் மண்ணின் ஈரப்பதம் காப்பதோடு, கிழங்கிலிருந்து துளிர்விடுவதும் அதிகரிக்கப்படுகிறது.

உரங்கள்

நடுவதற்கு முன்பு ஒரு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 100 கிலோ சாம்பல்சத்துக்களை அடியுரமாக இட வேண்டும். இரண்டு மாதத்திற்கு பிறகு மேலுரமாக 40 கிலோ தழைச்சத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

இரண்டு மாத இடைவெளியில் களைகள் எடுத்து வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
கழுத்து அழுகல் நோய்

சேனைக்கிழங்கில் கழுத்து அழுகல் நோய் காணப்படும். அதனை கட்டுப்படுத்த 2 கிராம் காப்டான் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டும். இவ்வாறு மண்ணில் ஊற்றுவதால் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

அறுவடை

சேனைக்கிழங்கு நட்டு 7 முதல் பத்து மாதங்கள் கழித்து அறுவடைக்கு தயாராகிவிடும். கிழங்கு முற்றிய செடியில் இலைகள் மஞ்சளாக மாறி கீழே தொங்கிவிடும். கிழங்குகள் முதிர்ச்சியடைந்தவுடன் வெட்டி எடுத்து சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைக்க வேண்டும். கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பராமரிக்க முடியும்.

மகசூல்

நன்கு பராமரிக்கப்பட்ட நிலத்தில் ஒரு எக்டருக்கு 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும்.

சேனைக்கிழங்கு பயன்கள்
  • இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின்களும் உள்ளன.
  • 100 கிராம் கிழங்கில் 330 கலோரி சக்தி கிடைக்கிறது. மேலும், சேனையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.
  • கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. இது உடலை வலுவடையச் செய்யும்.
  • இக்கிழங்கினை உட்கொண்டால் உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்கும்.
  • இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow