அரளி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

Jun 24, 2023 - 00:00
 0  55
அரளி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

அரளி பூ தாவரவியல் பெயர் நீரியம் ஔலியாண்டர் என்பதாகும். இது அப்போசயனேசி குடும்பத்தைச் சேர்ந்த இருவித்திலை தாவரம் ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா, மொரிடேனியா, மொராக்கோ, போர்ச்சுகல் அல்லது மத்திய தரைக் கடல் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது வளமற்ற வறண்ட நிலத்திலும் செழித்து வளரக்கூடியது ஆகும்.

இதன் சிறப்பு இது ஹிரோஷிமா நகரின் அதிகாரப்பூர்வமான சின்னமாக உள்ளது. 1945ல் ஹிரோஷிமா அமெரிக்க அணுகுண்டு தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தபோது முதல்முதலாக வளர்ந்து, பூத்தது அரளியே ஆகும்.

பெரும்பாலான திருக்கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படும் தாவரங்களில் அரளி கட்டாயம் இடம்பெற்றிருக்கும். தெய்வங்களுக்கு சார்த்தப்படும் பூமாலைகளில் அரளி முக்கிய இடம் பெறுகிறது.

அரளி பூ எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

செவ்வரளி, வெள்ளை அரளி என இதில் இரு வகைகள் உள்ளன.

பருவம்

புரட்டாசி மாதம் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்

ஏக்கருக்கு 3 டன் தொழுஉரம் இட்டு நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். தேவையான அளவுகளில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி இருக்குமாறு, லேசாக மண்ணைப் பறித்து செடிகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் முதல் மூன்று மாதங்களுக்கு வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.

அரளி பூ உரங்கள்:

ஏக்கருக்கு 50 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ NPK ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். பின் செடிக்கு அருகில் சிறிய குழிவெட்டி உரம் இட்டு மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசலை கலந்துவிட வேண்டும்.

அரளி பூ பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

சிறிய செடியாக இருக்கும் பொழுது மாதத்திற்கு மூன்று களைகளும், பெரிய செடிக்கு மாதம் ஒரு களையும் எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

செல் தாக்குதல்

செல் விழுந்தவுடன் செடி வெண்மையாகிவிடும். செடியைத் தட்டினால் செல் பறக்கும். பிறகு தழை அனைத்தும் கொட்டிவிடும்.

இதனை கட்டுப்படுத்த கெல்த்தேன் ஓரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி கலந்து அடிக்க வேண்டும்.

பச்சைப்புழு தாக்குதல்

இப்புழுக்கள் மழை மற்றும் பனி காலத்தில் பூச்செடியை தாக்கும். பூவிற்குள் சிறிய புழுவாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த குளோரிபைரிப்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி மருந்து கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நடவு செய்த மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். செடியின் அடிப்பகுதியில் இருக்கிற வளர்ந்த கிளைகளை ஒடித்து, நிலத்தில் பதியம் போட்டு புதிய செடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாய் செடியில் பறிப்பு முடியும் பொழுது, பதியம் போட்ட செடிகள் வளர்ந்து விடும். தாய் செடியை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக வளர்ந்த செடியிலிருந்து பூக்களை பறிக்கலாம். மற்ற பூக்களைப் போலவே மொட்டாக இருக்கும்பொழுதே பறித்துவிட வேண்டும்.

மகசூல்

ஒரு மாதத்திற்கு சராசரியாக 100 கிலோ பூ கிடைக்கும்.

அரளி பூ பயன்கள்:
  • தூசு, இரைச்சல் போன்றவற்றை தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
  • இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும்.
  • செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.
  • இதன் மலர்கள் வழிபாட்டுத் தலங்களில் பூஜைக்கு பயன்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow