திருக்குறள் - குறள் 913
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: வரைவின்மகளிர்.
திருக்குறள் - குறள் 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
பரிமேலழகர் உரை:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும். (பொருட்கு முயங்கும் மகளிர், கரு
மணக்குடவர் உரை:
பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும். இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.
Translation:
As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!.
Explanation:
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்