திருக்குறள் - குறள் 821

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: கூடாநட்பு.


திருக்குறள் - குறள் 821


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

மு.வரதராசனார் உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

பரிமேலழகர் உரை:
நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பத


மணக்குடவர் உரை:
முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.


Translation:
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.

Explanation:
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்