திருக்குறள் - குறள் 819
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: தீ நட்பு.
திருக்குறள் - குறள் 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.
மு.வரதராசனார் உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
பரிமேலழகர் உரை:
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்த
மணக்குடவர் உரை:
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.
Translation:
E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.
Explanation:
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்